மாவட்டத்தில் கருவூலம் மூலம் ரூ.567 கோடி வருவாய் முதன்மை செயலாளர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கருவூலம் மூலம் ரூ.567 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் கூறினார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து, வருகிற அக்டோபர் மாதம் முதல் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னிய கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக ரூ.288 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்த ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் மாநிலம் முழுவதும் உள்ள அலுவலர்கள் இணையதளம் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். பயோமெட்ரிக் முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாநிலத்தின் நிதிநிலை குறித்த விவரங்கள் உடனுக்குடன் அரசுக்கு கிடைக்கும். இதனால் காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும்.
பணியாளர்கள் தொடர்பான அரசின் ஆய்வு, திட்டமிடுதலுக்கு இந்த ஆவணங்கள் உதவும். இந்த திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 26 ஆயிரத்து 236 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த அலுவலர்களுக்கும், கருவூல அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 805 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரத்து 502 பேருக்கு ரூ.549 கோடியே 3 ஆயிரம் மதிப்பில் மருத்துவ சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரத்து 612 ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நேர்காணலுக்காக உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 961 பேர் நேர்காணலுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் உயிர்வாழ் சான்று பெற்று கருவூத்தில் பதிவு செய்ய கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஓய்வூதியர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதலின்படி, 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.586 கோடி ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.1,057 கோடியும் கருவூலம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருவூலம் மூலம் திண்டுக்கல் மாவடத்தில் ரூ.567 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த முகாமில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை (மின் ஆளுகை) கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மாவட்ட வன அலுவலர் வித்யா, மாவட்ட கருவூல அலுவலர் சரவணன், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் சித்ராசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story