மேட்டூர் அணை திறப்பு இல்லை: குறுவைக்கு கைகொடுக்குமா காவிரி மேலாண்மை ஆணையம்? விவசாயிகள் விரக்தி


மேட்டூர் அணை திறப்பு இல்லை: குறுவைக்கு கைகொடுக்குமா காவிரி மேலாண்மை ஆணையம்? விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:43 PM GMT)

தொடர்ந்து 7-வது ஆண்டாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு இல்லாத நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறுவைக்கு கைகொடுக்குமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. குறுவைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஒரு ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி என 3 போக சாகுபடிகளையும் விளைவித்து லாபம் ஈட்டி பல ஆண்டுகளாகி விட்டது. சம்பா, தாளடி சாகுபடி பருவத்தின்போது வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் அழுகி போவதும், பருவ மழைக்கு பின்னர் தண்ணீரின்றி பயிர்கள் கருகி போவதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. நெற்களஞ்சியம் என்ற புகழை தஞ்சை தரணி இழந்து வருகிறது என்பது விவசாயிகளின் வேதனை.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடியை விவசாயிகள் சுலபமாக மேற்கொள்வார்கள். இந்த குறிப்பிட்ட தேதியில் போதுமான அளவு தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடவில்லையெனில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு எட்டாக் கனியாகி விடும்.

மேட்டூர் அணையில் இருந்து 12-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்து அதன் பின்னர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்(புது ஆறு) வழியாக சென்று குறுவை சாகுபடிக்கு பாசனம் அளிக்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் விளை நிலங்கள் பயன் அடையும். கடந்த 6 ஆண்டுகளாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

இந்த ஆண்டு தொடர்ந்து 7-வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. தற்போது டெல்டா பகுதி ஆறுகளிலும் தண்ணீர் இல்லை. கல்லணை வறண்டு கிடக்கிறது. வயல்களும் தரிசாக கிடக்கின்றன. குறுவைக்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். சமீபத்தில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் குறுவைக்கு கைகொடுக்குமா? என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த ஆண்டு அணை திறப்பு இல்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் அறிவித்து விட்டார். இதனால் இந்த ஆண்டு தொடர்ந்து 7-வது முறையாக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறப்பு இல்லை என்ற சூழல் உருவாகி விட்டது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரை பெற்றுத்தராவிட்டால், இயற்கையை நம்புவதை தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story