மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Jun 2018 4:15 AM IST (Updated: 12 Jun 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் அரியலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 264 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

திருமானூர் கொள்ளிட ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் ஆதார் எண்ணுடன் 2,500 பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர். அதில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி கடந்த மாதம் 4-ந் தேதி பலத்த போலீசார் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொள்ளிட ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், கீழவரப்பு, மேலவரப்பு, கோமான், குருவாடி, திருமழபாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கத்தை கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் தொடங்கினர்.

கொள்ளிட ஆற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டாம் என கூறி இலவச அழைப்பு எண் 1100-ஐ மேற்கண்ட கிராம மக்கள் தொடர்பு கொண்டும் பதிவு செய்தனர். மேலும் ஆதார் எண்ணுடன் 2,500 பேர் கையெழுத்திட்ட மனுக் களை கலெக்டரிடம் அளித்தனர். கையெழுத்திட்ட மனுக்களின் நகல்களை ஆளுநர் மற்றும் தமிழக முதல்- அமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர்.

இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story