ராமேசுவரத்தில் வீடு புகுந்து 30 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
ராமேசுவரத்தில் வீடு புகுந்து 30 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்கு பகுதியில் குடியிருந்து வருபவர் பாண்டி(வயது 52). இவருடைய மனைவி வசந்தசேனை. இவர்களுடைய மகள் அழகுராணி அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகுராணியின் கணவர் போலீஸ்காரர் மல்கோத்ரா இரவு பணிக்கு சென்று விட்டதால் பாண்டியும், அவருடைய மனைவியும் மகள் வீட்டிற்கு சென்று தூங்கினார்களாம்.
காலையில் அவர்கள் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.62,000 ரொக்கம் ஆகியற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டி, நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேசுவரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், அருண்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நகர் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.