கண்மாய் தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கொள்ளை, கலெக்டரிடம் புகார்


கண்மாய் தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கொள்ளை, கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:47 PM GMT (Updated: 11 Jun 2018 11:47 PM GMT)

கண்மாய் தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது என்று பொதும்பு கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

மதுரை,

மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட பொதும்பு கிராம மக்கள் நேற்று கலெக்டர் வீரராகவராவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பொதும்பு கிராமத்தில் 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு கிழக்குபுறமும், மேற்குபுறமும் என 2 பக்கமும் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் இருந்து எங்கள் கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் 150 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது.

இப்போது இந்த 2 கண்மாய்களிலும், தூர்வாருதல் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் அள்ளி கொண்டு இருக்கிறார்கள். மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டு உள்ளதால் நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கிராமத்தில் சில தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் திருட்டிலும் ஈடுபடுகின்றனர். மணல் மற்றும் குடிநீர் திருட்டால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டது. எனவே கலெக்டர் தலையிட்டு மணல் மற்றும் குடிநீர் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கிராம மக்கள் மணல் திருட்டு தொடர்பான படங்களை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Next Story