டாக்சி டிரைவர்கள் தொழில் முனைவோர் ஆவது எப்படி? அதிகாரிகள் நேரடி பயிற்சி


டாக்சி டிரைவர்கள் தொழில் முனைவோர் ஆவது எப்படி? அதிகாரிகள் நேரடி பயிற்சி
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 6:39 PM GMT)

டாக்சி டிரைவர்கள் தொழில் முனைவோராவது எப்படி? என்பது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு தலைமையில் அதிகாரிகள் நேரடி பயிற்சி அளித்தனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் ஆகுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வாடகை வாகனம் ஓட்டும் டாக்சி டிரைவர்கள், தொழில் முனைவோர் ஆக தங்களை மேம்படுத்தி கொள்வது எப்படி? என்பது குறித்து சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குனர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலை வகித்தார். இதில், டாக்சி டிரைவர்கள் தொழில் முனைவோராக தங்களை எவ்வாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பது பற்றி வெ.இறையன்பு அறிவுரை வழங்கி, பேசியதாவது.

எந்த வாகனத்தை ஓட்டுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி ஓட்டுகிறோம் என்பது தான் முக்கியம். தொழிலை நேசிக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் டாக்சி டிரைவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் உடலை நேசிக்க வேண்டும். அதை நீங்கள் செய்யாவிட்டால் வேறு எந்த வேலையையும் உங்களால் செய்யமுடியாது.

அதேபோல், உங்களுடைய வாழ்வின் ஜீவாதாரமாக இருக்கும் உங்களுடைய வாகனத்தை நேசிக்க வேண்டும். அதை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். வாகனத்தை அழகாக பராமரித்தால் நிறைய வாகனங்களை வாங்கும் வரத்தை பெறுவீர்கள். டாக்சி டிரைவர்கள் என்பதை நீங்கள் கம்பீரமாக, பெருமையாக சொல்ல வேண்டும். நேர்மையாக செய்யும் தொழிலுக்கு எப்போதும் உயர்வு இருக்கும்.

டாக்சி டிரைவர் என்று சொல்வதை காட்டிலும், ‘மக்களை அவர்களின் இலக்கினை நோக்கி அழைத்து செல்லும் உன்னதமான வேலை செய்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

அடுத்ததாக பயணிகளை நேசியுங்கள். உங்களுடைய வாடிக்கையாளர்கள் எப்போதும் உங்களுக்கு வி.ஐ.பி. தான். மகிழ்ச்சியோடும், நேர்த்தியாகவும் அவர்களை அணுக வேண்டும். அப்படி செய்தால் அவர்களுடைய நம்பிக்கையை பெறமுடியும். அதன்மூலம் பல வாடிக்கையாளர்களை நீங்கள் தக்கவைக்கலாம். வருமானத்தை சேமிப்பது மிகவும் அவசியம். அதை சரியான வகையில் முதலீடு செய்யவேண்டும்.

தொழில் முனைவோர் ஆவதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். எந்த தொழிலிலும் ஒரு புதுமையை செய்ய முடியும். புதுமை செய்ய முடியாத தொழில் எதுவும் இல்லை. அதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதை நேர்த்தியாக செய்ய வேண்டும். முடியாது என்று எதையும் நினைக்காதீர்கள். உங்களால் நிச்சயம் தொழில் முனைவோர் ஆக முடியும்.

தொழில் முனைவோர் ஆகி பணக்காரன் ஆவேன் என்று நினைக்காதீர்கள். தொழில் முனைவோர் ஆகி 100 பேருக்கு வேலை கொடுப்பேன் என்று நினையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல், வாகன ஓட்டுனர்களுக்கான காப்பீடு, சமூக பொருளாதார பிரச்சினைகள், மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்வது?, தொழில் முனைவோருக்கான மத்திய-மாநில அரசின் கடன் திட்டங்கள், மானியங்கள் என்ன?, நேரம் மேலாண்மையை எப்படி பின்பற்றுவது? வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சேமிப்பின் அவசியம், அதை எப்படி வேறு தொழிலில் முதலீடு செய்வது? என்பது குறித்தும் அதிகாரிகள் கே.ரெங்கநாதன், மதியழகன், வானமாலி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.

Next Story