மழையால் எடக்காடு–அவலாஞ்சி சாலையில் 3 மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மழையால் எடக்காடு–அவலாஞ்சி சாலையில் 3 மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் மண் எப்போதும் ஈரப்பதமாகவே காணப்படுகிறது. மழையின் போது சாலையோர மரங்கள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுந்து வருகின்றன. தொடர் மழை காரணமாக நேற்று ஊட்டி அருகே எடக்காடு–அவலாஞ்சி சாலையில் கோத்தகண்டி பகுதியில் சாலையோரம் இருந்த 3 மரங்கள் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து இத்தலார், எடக்காடு, எமரால்டு, கோத்தகண்டி வழியாக அவலாஞ்சி செல்லும் அரசு பஸ் மற்றும் வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் மரத்துண்டுகள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
தொடர் மழையால் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் எடக்காடு–அவலாஞ்சி சாலை கோத்தகண்டி பகுதியில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிகளவில் படிந்து உள்ளது. இதனால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினாலும், சாலையில் மண் கிடப்பதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலம் 3 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தொட்டபெட்டா–சின்கோனா சாலையில் ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்வாள் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். ஊட்டி வடக்கு ஏரி சாலையில் நின்று கொண்டு இருந்த மரம் ஒன்று மின் ஒயர் மீது விழுந்தது. இதனால் மரவியல் பூங்காவில் உள்பகுதியில் இருந்த மின்மாற்றி சாய்ந்தது. வனத்துறையினர் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். மின்வாரிய ஊழியர்கள் கிரேன் மூலம் சாய்ந்த மின்மாற்றியை சரிசெய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–
குன்னூர்–10, கூடலூர்–87, குந்தா–8, கேத்தி–11, கோத்தகிரி–3, நடுவட்டம்–29, ஊட்டி–5.3, கல்லட்டி–6, கிளன்மார்கன்–44, அப்பர்பவானி–186, எமரால்டு–45, அவலாஞ்சி–164, கெத்தை–48, கிண்ணக்கொரை–1, கோடநாடு–8, தேவாலா–92, பர்லியார்–2 என மொத்தம் 749.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 44.08 மழை பெய்து உள்ளது. தொடர் மழை காரணமாக ஊட்டியில் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, டைகர்ஹில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
தொட்டபெட்டா லோயர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை ஆகிய 2 அணைகள் நிரம்பி உள்ளது. மற்ற அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வந்துக்கொண்டே இருக்கிறது. ஊட்டியில் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.