குடிநீர் பிரச்சினை குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்


குடிநீர் பிரச்சினை குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 13 Jun 2018 3:45 AM IST (Updated: 13 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினை குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் தணிந்தபாடு இல்லை. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பாதசாரிகள் கையில் குடைபிடித்துக்கொண்டும், துணியால் தலையை போர்த்தியபடியும் செல்வதை பார்க்க முடிகிறது. அதிக வெப்பத்தால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து தாகத்தை வருத்துகிறது.நீர், மோர், கரும்புசாறு, பதனீர், குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பருகியும், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டும் பொதுமக்கள் தாகத்தை தணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலத்தையொட்டி பல்வேறு கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதற்கு தீர்வுகாண கோரி பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட்டு குடிநீர் பிரச்சினை குறித்து தகவல் தெரிவித்தால் அதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்காக பொதுமக்கள் போராட்டம் நடத்துவதை கைவிட்டு எந்தெந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ அதுசம்பந்தமாக 99522 29914 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story