பயிர்காப்பீட்டு தொகையை ரொக்கமாக வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பயிர்காப்பீட்டு தொகையை ரொக்கமாக வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 7:18 PM GMT)

செஞ்சி அருகே பயிர் காப்பீட்டு திட்ட தொகையை ரொக்கமாக வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

செஞ்சி

செஞ்சியை அடுத்த பென்னகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் 192 பேருக்கு பயிர் காப்பீட்டு தொகை அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே 40 பேருக்கு காப்பீட்டு தொகை ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு உரிய தொகை காசோலையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட் டது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்னகர் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, பயிர்காப்பீட்டு தொகையை காசோலையாக வழங்கினால் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு தொடங்கித்தான் பணத்தை பெற முடியும் என்பதால் சிரமம் ஏற்படும். எனவே எங்களுக்கு பணத்தை ரொக்கமாகவே வழங்க வேண்டும் என்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், கூட்டுறவு சங்க தலைவர் ரவி, செயலாளர் மூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் குமரேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடமும், கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

பின்னர் பயிர்காப்பீட்டு தொகை நாளை மறுநாள் (அதாவது நாளை) ரொக்கமாக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக விவசாயிகளின் போராட்டத்தால் பென்னகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story