காரில் கஞ்சா கடத்தல் திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி கைது
காரில் கஞ்சா கடத்திய திண்டுக்கல் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிற்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸ் பிரிவிற்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து மத்திய போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மதுரை மண்டல போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு காத்து இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு சொகுசு காரை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 251½ கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அந்த காரில் இருந்து 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வத்தலக்குண்டுவைச்சேர்ந்த அருண்(வயது 33), ரவி(43), ஸ்ரீராம்(30) என்பது தெரியவந்தது. இவர்களில் அருண், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, அந்த 3 பேரையும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு காரும், 251 ½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரிடமும் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா கடத்தியதாக பிடிபட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணின் சொந்த ஊர் வத்தலக்குண்டு காமராஜர்புரம் ஆகும். இவருடைய தந்தை அய்யாத்துரை; தாயார் வளர்மதி. திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக வளர்மதி இருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் செய்தி–மக்கள் தொடர்பு துறையில் உதவி அலுவலர்கள் 32 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் அருணும் ஒருவர். சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட செய்தி– மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (விளம்பரம்) உதவி அலுவலராக அருண் பணியில் சேர்ந்து, 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், அவர் கஞ்சா கடத்தியதாக சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.