முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்வு
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்ந்தது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
தேனி
தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 121.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 565 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர் இருப்பு 2 ஆயிரத்து 846 மில்லியன் கன அடியாக இருந்தது.
பலத்த மழை காரணமாக நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 476 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 124.70 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 3.60 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் சீராக உயர தொடங்கியுள்ளது.
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதேபோல முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது சீராக உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் இருந்து தேனி நகராட்சி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 353 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணையில் இருந்து மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story