தொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை


தொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 4:00 AM IST (Updated: 13 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை பகுதியில் நடக்கும் தொடர் திருட்டு தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை, வில்லியனூர், தேங்காயத்திட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதகடிப்பட்டில் உள்ள கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது.

இந்த கொள்ளை முயற்சியில் திருபுவனை, மதகடிப்பட்டு சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் கூட்டாளிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இந்த நிலையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் மதகடிப்பட்டு, திருபுவனை, திருபுவனை பாளையம், மகதடிப்பட்டு பாளையம், கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதிதாக வாடகைக்கு வீடு கேட்டு வருபவர்களை நன்கு விசாரித்த பிறகே வீடு கொடுக்கவேண்டும். ஊரின் ஒதுக்குப்புறமாக, வயல்வெளி பகுதியில் சந்தேக நபர்கள் இருப்பது தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும், பெண்கள் அணிந்துள்ள நகைகள் வெளியே தெரியும்படி செல்லவேண்டாம் என்று அறிவுரை கூறினர்.

அப்போது கிராமப்புறங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story