போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி
போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தம்பி மணிசந்தர் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் மும்பையில் சந்துருஜி தங்கி இருப்பதாகவும், அவரை போலீசார் சுற்றி வளைத்ததாகவும் நேற்று முன்தினம் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் சந்துருஜி பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த காட்சியை சந்துருஜி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். சந்துருஜியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவரது வீடியோ காட்சிகள் வெளியான சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
50 நாட்களுக்கு மேலாக போலீசாருக்கு போக்குகாட்டி வரும் சந்துருஜியை கைது செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த வழக்கினை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒரு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை பரப்பும் போலீசார் யார்? என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.