மணியரசனை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டது திரைப்பட இயக்குனர் களஞ்சியம் பேட்டி


மணியரசனை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டது திரைப்பட இயக்குனர் களஞ்சியம் பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2018 11:15 PM GMT (Updated: 12 Jun 2018 8:40 PM GMT)

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளை காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் களஞ்சியம் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் கடந்த 10-ந்தேதி காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்தேசியபேரியக்க தலைவருமான மணியரசன் தாக்கப் பட்டார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்தன்னை கொலை செய்யும் நோக்கோடு மர்ம நபர்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.

ஆனால் போலீசார் விசாரணையில் மணியரசனிடம் வழிப்பறி கொள்ளை செய்வதற்காகவே தாக்கியதாக தெரிவித்தனர். இந்த நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணியரசனை தமிழர் நலன் பேரியக்க மாநில தலைவரும், திரைப்பட இயக்குனருமான மு.களஞ்சியம் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் களஞ்சியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 10-ந்தேதி காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், 40 ஆண்டுகால சமூக போராளியுமான மணியரசனை, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்கத்தோடு கையை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆனால் காவல்துறையினர் மணியரசனின் கைப்பையை பிடுங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கைப்பையை பிடுங்குவதற்கான முயற்சி அல்ல.

தாக்குதல் நடந்த போது கைப்பை அங்கேயே விழுந்துவிட்டதாக மணியரசன் தெரிவித்தார். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் கைப்பை பிடுங்கும் போது இந்த முயற்சி நடந்ததாக போலீசார் தெரிவிக்கிறார்கள். மணியரசன் தனிபட்ட மனிதர் அல்ல. தமிழ் தேசிய இனத்தின் போராளி. அவரை கொல்ல முயற்சி ஈடுபட்டவர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கண்டுபிடிக்க வேண்டும். திருட முயற்சி செய்தனர் என்பதை விட்டுவிட்டு, கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து தமிழக அரசு அவர்களை கைது செய்ய வேண்டும்.

ஐ.பி.எல். போராட்டத்தின் போது எங்களை தாக்கினர். அதே போல் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் மீது வழக்கு, திரைப்பட இயக்குனர்கள் கவுதமன், சீமான் போன்றவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது தேசதுரோக வழக்கு, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். இதே போல் டைரக்டர் அமீர் மீது வழக்குப்பதிவு செய்ததும் மன்னிக்க முடியாத குற்றம். மணியரசன் போன்றவர்களை அச்சுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது. இனி பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா போன்றவர்களுக்கு எந்த பதிலும் தெரிவிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story