சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம்
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் விநாயகர், தில்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடந்த 8-ந்தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் தில்லை காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது கோவில் முன்பு புறப்பட்டு, வடக்கு வீதி, கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (புதன்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவமும், 16-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story