சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு மாடம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு
சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு மாடம்பாக்கம் ஏரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாடம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாடம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி மாடம்பாக்கம் ஏரி பகுதியில் இருந்து தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, அதில் 16 லட்சம் லிட்டர் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கும், 2 லட்சம் லிட்டர் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கும் வினியோகிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு மாடம்பாக்கம் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
எங்கள் பகுதிக்கே தண்ணீர் சரிவர வினியோகம் செய்வது இல்லை. ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்று கூறி நேற்று மாடம்பாக்கம் ஏரியில் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயிகளும் இந்த கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து தாசில்தார் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது என பொதுமக்களும், அதிகாரிகளும் முடிவு செய்தனர். பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.