பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி, இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு


பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி, இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Jun 2018 5:15 AM IST (Updated: 14 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்,

கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருடைய மனைவி சவிதா (வயது 27). இவர்கள் 2 பேரும் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகின்றனர். கலப்பு திருமணம் செய்த இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சவிதாவுக்கு கடலூர் கோர்ட்டில் பணி வழங்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் திடீரென வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சவிதா பணிச்சுமையால் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் காரணம் என்றும், அவர் எழுதியுள்ள 2½ பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை கடலூர் புதுநகர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

நான் கடலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2–வது பெண் குழந்தைக்கு தலையில் பிரச்சினை இருப்பதால் அடிக்கடி வலிப்பு வரும். ஆனால் அவளை பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை. என்னுடைய கணவரும் ஆயுதப்படையில் தான் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். தற்போது அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இந்நிலையில் என்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஏதுவாக வேறு அலுவலக பணி தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். அவரும் எனக்கு ரேடியோ பிரிவில் வேலை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

இதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் யாரை கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்தாய்? என்று ஒருமையில் திட்டினார். பின்னர் நான் ரேடியோ பிரிவில் 3 மாதம் வேலை பார்த்தேன். அதன்பிறகு என்னை மற்ற அலுவலக பணிக்கு அனுப்பினார். ஆயுத கிடங்கு பாரா பணிக்கு அனுப்பி என்னை சரமாரியாக திட்டினார்.

நான் கர்ப்பிணியாக இருந்த போதும், என்னை கவாத்து பயிற்சி செய்ய சொல்லுவார். மற்ற போலீசார் முன்னிலையில் என்னை திட்டுவார். பாரா போட்டு 4 மணி நேரம் நிற்க வைத்ததால், வீட்டுக்கு செல்லும் போது மயங்கி விழுந்து விட்டேன். இதில் கரு கலைந்து விட்டது. இது பற்றி டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதுபற்றி விசாரணைக்காக சென்று வந்தேன். இதனால் எனக்கு ரேடியோ பிரிவில் வேலை வழங்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்ற அலுவல் பணிக்கு அனுப்புகிறார். சாதி ரீதியாகவும் பேசுகிறார். எனது இந்த முடிவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் காரணம். இவ்வாறு அந்த கடிதத்தில் சவிதா எழுதியுள்ளார்.

இது பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ் பெக்டரிடம் கேட்ட போது, இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், எல்லோருக்கும் சுழற்சி முறையில் அலுவல் பணி வழங்கப்படும். அதன்படி அவருக்கு சப்–இன்ஸ்பெக்டர் தான் கோர்ட்டு பணி வழங்கி உள்ளார். ஆனால் அவர் பணிக்கு செல்லவில்லை. மதியம் தான் விவரம் தெரிந்தது என்றார்.

இது பற்றி கடலூர் வந்த வடக்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதரிடம் கேட்டதற்கு, பணிச்சுமை என்று தெரிந்து தான் போலீஸ் வேலைக்கு அனைவரும் வருகிறார்கள். இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றார்.


Next Story