சிவகங்கை அருகே வினோத கிராமம்: மாடி வீடு கட்டினால் உயிர்பலி; ஆண்கள் காது துளையை பெரிதாக்கி வளையம்


சிவகங்கை அருகே வினோத கிராமம்: மாடி வீடு கட்டினால் உயிர்பலி; ஆண்கள் காது துளையை பெரிதாக்கி வளையம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:45 PM GMT (Updated: 13 Jun 2018 7:37 PM GMT)

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது எஸ்.கோவில்பட்டி கிராமம்.

சிவகங்கை,

 மனிதன் ஆதிமனிதாக இருந்த போது தன்னை விட வலிமையான சக்தி உலகம் முழுவதும் உள்ளது என்பதை உணர்ந்திருந்தான். பின்னர் நாகரிக வளர்ச்சியினால் யோகா, தியானம் போன்ற கலைகளினால் இறைவனின் ஆற்றலை உணர்ந்து கொண்டான். அப்படியான ஆற்றலை உணர்ந்த அக்கால மனிதன் அந்த சக்தியை தங்களது குலதெய்வமாகவும், கிராமத்தின் காவல் தெய்வமாகவும் நிறுவி வழிபாட்டு முறைகள் செய்து வருகிறான். மேலும் பழங்கால வழிபாடு மற்றும் சடங்கு முறைகளை கடைபிடித்து வருகின்றான். அப்படிப்பட்ட வித்தியாசமாக ஒரு சடங்கை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது எஸ்.கோவில்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த கிராமத்தின் காவல் தெய்வமாகவும், இந்த மக்களின் குலதெய்வமாகவும் செவிட்டு அய்யனார் கோவில் உள்ளது.

முன்னொரு காலத்தில் இக்கிராமத்தில் உள்ள மக்கள் காட்டுப்பகுதியில் வேட்டையாடிய போது அதில் ஒருவர் வீசிய ஆயுதம் ஒன்று அங்கு தவத்தில் இருந்த காவல் தெய்வமான செவிட்டு அய்யனாரின் காதை தாக்கி காயப்படுத்தியதாம். இதனை கண்டு அஞ்சிய கிராம மக்கள் இனி எங்கள் கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு காதுகுத்தி அந்த காது துளையை பெரிதாக்கி அதில் ஈயத்தினால் ஆன வளையத்தை அணிந்து பிராயச்சித்தம் செய்வதாக அய்யனாரிடம் வேண்டிக்கொண்டனர். அந்த வழக்கம் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இந்த காவல் தெய்வம் தரையில் வீற்றிருப்பதால் அவரை விட உயரமான நிலையில் யாரும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த கிராமமக்கள் மாடி வீடுகளை கட்டுவதில்லை என்றும், அவ்வாறு மீறி கட்டினால் அவர்கள் காவல் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி பல விதமான துன்பங்களை அனுபவித்து பின்னர் உயிர்பலி ஏற்படும் என்று இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த பழக்கவழக்கம் குறித்து எஸ்.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒய்யப்பன் சொல்கிறார்.

எங்கள் கிராமத்தில் உள்ள காவல் தெய்வம் செவிட்டு அய்யனார் பழங்காலத்தில் பூமிக்கு அடியில் தவம் இருந்து வந்தார். அப்போது எங்களது மூதாயர் காட்டு பகுதிக்கு வேட்டைக்கு சென்றபோது, அதில் ஒருவர் வீசிய வேல் கம்பானது அந்த பூமியில் குத்தி நின்றது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது பூமியில் இருந்து ரத்தம் பீச்சியடித்தது. இதனால் அதனை தோண்டி பார்த்தபோது உள்ளே தவத்தில் இருந்த அய்யனாரின் காதில் இந்த வேல் கம்பு குத்தி அதில் இருந்து ரத்தம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து எங்களது வாரிசை தண்டிக்காமல் இருக்க நாங்கள் ஆண்டாண்டு காலம் எங்களது ஆண்வாரிசின் காதில் பெரிய துளையை ஏற்படுத்தி அதில் குணுக்கு என்று அழைக்கப்படுகிற காதை பெரிதாக்கி வளையம் அணிவதாக வேண்டிக்கொண்டார்கள். இந்த வழக்கத்தை இன்றுவரை நாங்கள் காதில் பெரிய துளையை ஏற்படுத்தி வருகிறோம்.

ஆண் குழந்தை பிறந்த 3 மாத்தில் அந்த குழந்தைகளுக்கு காது குத்தி அதை பெரிய துளையாக்கி அதில் ஈயத்தினால் ஆன வளையம் அணிவிக்கப்படும். இவ்வாறு குத்தப்படும் போது கடும் விரதம் இருக்க வேண்டும். காது குத்திய பின்னர் 3 மாத காலம் அதில் புண் ஏற்படும். இதை குணப்படுத்துவதற்கு அதில் சிறிய வேம்புக்குச்சியை வைத்திருக்க வேண்டும். இந்த 3 மாத காலத்திற்குள் அந்த குழந்தையை அந்த குடும்பத்தார்கள் மட்டுமே தொட வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை தொட்டு கொஞ்சுவதற்கு இடமில்லை.

சில இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், அவர்களுக்கு காதில் ஏற்பட்ட இந்த பெரிய துளையினால் அரசு வேலை கிடைப்பதில்லை. ஆனாலும் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சில இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த அய்யனார் தரையில் இருப்பதால் எங்களது கிராமத்தில் கட்டப்படும் வீடுகள் தரைமட்டம் வரையில் இருந்து தான் இருக்கும். அதை விட மாடி வீடு எடுத்து அதில் தங்கினால் அய்யனாரை விட உயரத்தில் இருக்க நேரிட்டு அய்யனாரின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். இதனால் அந்த குடும்பத்தில் உயிர்பலி ஏற்பட்டதும் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய அறிவியல் காலக்கட்டத்தில் கிராமத்தில் உள்ள ஆண் குழந்தைகளின் காதை பெரிதாக்கி அதில் வளையம் அணிவிக்கும் பழக்கம் வியக்கத்தக்கதாக உள்ளது.


Next Story