மதுரையில் போலீசாரின் பணி சவாலானது - புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி


மதுரையில் போலீசாரின் பணி சவாலானது - புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2018 4:30 AM IST (Updated: 14 Jun 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போலீசாரின் பணி சவாலானது. இங்கு பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தந்தால் குற்றங்கள் குறையும் என்று புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சென்னையில் காவலர்கள் நலக்குழுவின் ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து மதுரை மாநகர கமி‌ஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

மதுரை நகரில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்களை தடுக்க தனி கவனம் செலுத்தப்படும். நான் ஏற்கனவே மதுரையில் போக்குவரத்து துணை கமி‌ஷனராக பணியாற்றி உள்ளோன். அப்போது மக்கள் தொகையும் குறைவு, வார்டு எண்ணிக்கையும் குறைவு. ஆனால் இன்று மதுரை நகரில் மக்கள் தொகையும் அதிகரித்து, வார்டு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இப்போதுள்ள மதுரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கை குறைவு. ஆதலால் இங்கு போலீசாரின் பணி சவாலானது.

சமுதாய பிரச்சினைகள் தலைதூக்குவதாக கேள்விப்பட்டேன். அதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன். போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும். இதுதொடர்பான திட்டம் ஒன்று என்னிடம் உள்ளது. அதனை விரைவில் அறிவிப்பேன். நான் பணிபுரிந்த இடங்களில் அந்த திட்டங்கள் மூலம் குற்றங்களை குறைத்துள்ளேன். போலீஸ்காரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் என்னிடம் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story