முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 126.10 அடியாக உயர்வு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 126.10 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 14 Jun 2018 4:45 AM IST (Updated: 14 Jun 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.10 அடியாக உயர்ந்தது.

தேனி,

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால், அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 825 கன அடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம் 126.10 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 856 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலையில் வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் 124.70 அடியாக இருந்தது. நேற்று காலையில் 126.10 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையும் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் கிடு, கிடுவென உயர வாய்ப்பு உள்ளது.

அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அதேநேரத்தில் தற்போது திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் சேமித்து வைக்கப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே, முதல் போக பாசனத்துக்கும், 18-ம் கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story