ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை


ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 9:31 PM GMT)

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கழிவுநீர் கால்வாயை தூர் வாரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் தேங்காமல் இருக்க பாலம் அமைக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், அரசியல் கட்சியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பிறகு அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் போராட்டம் நடத்தியவர்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ராசிபுரம் 3-வது வார்டுக்கு உட்பட்ட சி.பி.கண்ணையா தெரு, லிங்கப்பா தெரு, தேசாய் பெருமாள் தெரு, காமாட்சி பெருமாள் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, தேரடித் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களில் சரியான சாக்கடை வசதி இல்லாததாலும், மழைகாலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் வீடுகளுக்கு உள்ளே சாக்கடை நீரும், மழைக்காலங்களில் மழைநீரும் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகவே தற்காலிக தீர்வாக மழை நீரும், சாக்கடை நீரும் வெளியேற குழாய்கள் அமைக்காமல், நிரந்தர தீர்வாக பழைய பஸ் நிலையம் அருகில் புதிய பாலங்கள் அமைத்து தரவேண்டும்.

எங்கள் வீதிகள் வழியாக புதுப்பாளையம் ரோடு மற்றும் சின்னக்கடை தெரு வழியாக வரும் சாக்கடை நீரும், மழை நீரும் பெருக்கெடுத்து செல்வதால், தற்காலிக சீரமைப்பு எந்த நல்ல தீர்வையும் தராது. எனவே நிரந்தர தீர்வாக அனைத்து வீதிகளின் வழியாக சங்கமமாகும் சாக்கடை மற்றும் மழைநீர் வெளியேற பழைய பஸ் நிலையம் அருகில் சிதிலமடைந்து இருக்கும் பழைய பாலத்தை சீர் செய்து தர வேண்டும். சாக்கடை நீர் மற்றும் மழைநீர் தேக்கத்தின் காரணமாக 10-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். சி.பி.கண்ணையா தெருவில் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதி வரை சாக்கடையை தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பிறகு அவர் 3-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாக்கடை நீர் தேங்கி இருக்கும் பகுதியை பார்வையிட்டார். 

Next Story