மாவட்ட செய்திகள்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கட்சிகளை வைத்து பிரச்சினைகளை அணுக முடியாது திருநாவுக்கரசர் பேட்டி + "||" + In the case of Cauvery water distribution, parties can not access problems with the interview of the Tirunavukarar

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கட்சிகளை வைத்து பிரச்சினைகளை அணுக முடியாது திருநாவுக்கரசர் பேட்டி

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கட்சிகளை வைத்து பிரச்சினைகளை அணுக முடியாது திருநாவுக்கரசர் பேட்டி
காவிரி நதிநீர் பங்கீடு என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை. கட்சிகளை வைத்து இப்பிரச்சினையை அணுக முடியாது என தஞ்சையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர, மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் து.கிருஷ்ணசாமி வாண்டையார், டி.ஆர்.லோகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாதம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிரேசி சேவியர், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விசுவநாதன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் பேசினர்.

இதில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பென்னட் அந்தோணிராஜ், குணா பரமேஸ்வரி, வைரக்கண்ணு, வட்டார தலைவர் யோகானந்தம், வக்கீல் ராமசாமி மாநகர மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.ஆர்.வாசு, பொருளாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமிநாராயணன் நன்றி கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளை(அதாவது இன்று) வரவுள்ளதை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும். மேலும், ஆட்சி கவிழ்கிறதா? அல்லது நிலை பெறுமா? என்பது தெரியவரும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த விஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சினையை அணுக முடியாது. எனவே தமிழக அரசு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும். என்றாலும் தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எப்போதும் போராடும்.

எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது காவல் துறை பயப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 35 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்துவது, ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் குழு அமைப்பது மக்கள் பிரச்சினைக்காக போராடுவது ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக கட்சி மாவட்ட அளவில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.