ஆயுள் தண்டனையை எதிர்த்த பேரனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி


ஆயுள் தண்டனையை எதிர்த்த பேரனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 13 Jun 2018 11:37 PM GMT (Updated: 13 Jun 2018 11:37 PM GMT)

பணம் கொடுக்காததால் முதியவரை குத்திக்கொன்ற வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்த பேரனின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹிரோஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஈரநரசிம்மய்யா(வயது 70). இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகன்கள் 4 பேருக்கும் திருமணம் ஆனதால், அவர்கள் தனித்தனியே வசித்து வருகிறார்கள். ஈரநரசிம்மய்யா தனது பேரன், பேத்திகளின் செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், 2-வது மகன் நரசிம்ம மூர்த்தியின் மகன் வெங்கடேஷ் மூர்த்தி என்ற தாசா(28) என்பவருக்கு மட்டும் ஈரநரசிம்மய்யா பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பேரன் வெங்கடேஷ் மூர்த்தி, தாத்தா ஈரநரசிம்மய்யா ஆகியோருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி பண விஷயம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மூர்த்தி கத்தியை எடுத்து ஈரநரசிம்மய்யாவை சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த கத்திக்குத்து காயமடைந்த ஈரநரசிம்மய்யா பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி 5 நாட்கள் கழித்து ஈரநரசிம்மய்யா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈரநரசிம்மய்யாவை கொலை செய்ததாக அவருடைய பேரன் வெங்கடேஷ் மூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு புறநகர் மாவட்ட 1-வது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வெங்கடேஷ் மூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக கூறி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து வெங்கடேஷ் மூர்த்தி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் போபண்ணா மற்றும் பி.ஏ.பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இறந்த ஈரநரசிம்மய்யா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வெங்கடேஷ் மூர்த்தி கொலை செய்யும் நோக்கத்தில் அவர் மீது கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால், அவருடைய கொலை திட்டமிட்டு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்டு உள்ளது‘ எனக்கூறி அவருடைய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

Next Story