ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது


ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2018 11:15 PM GMT (Updated: 14 Jun 2018 7:00 PM GMT)

திருத்தணியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி நடந்தது. இது தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோரமங்கலத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 46). தபால் நிலைய ஊழியர். இவரது வீட்டில் தபால் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தாமோதரன் திருத்தணி கோரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமானோர் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தி வந்தனர்.

தாமோதரனுக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த அவரது சகோதரர் ருக்மாங்கதன் (42), தாமோதரனின் மாமனாரான சென்னை திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த வெங்கட்ராஜ் (66) என்பவரும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களான தாமோதரன் தன்னிடம் சீட்டு கட்டி பணம் எடுத்தவர்களுக்கு சரியான முறையில் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

பணம் செலுத்தியவர்கள் தொடர்ந்து கேட்டபோது மேற்கண்ட 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் சீட்டு கட்டியவர்களிடம் தரவேண்டிய ரூ.1 கோடியே 54 லட்சத்து 70 ஆயிரத்து 531-ஐ மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன் மற்றும் போலீசார் நேற்று தாமோதரன், ருக்மாங்கதன், வெங்கட்ராஜ் ஆகியோரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Next Story