திருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் கொலை செய்த வாலிபர்


திருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் கொலை செய்த வாலிபர்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:45 AM IST (Updated: 15 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது54). வியாபாரியான இவர் ரெகுநாதபுரம் அருகே உள்ள ஆர்.மேலூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையின் அருகில் மதுகுடிக்க வருபவர்களுக்கு டம்ளர் உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தாராம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கிருஷ்ணன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தெற்கூரை சேர்ந்த துரைச்சாமி மகன் போஸ் என்ற கட்டைபோஸ்(35) என்பவர் மோட்டார்சைக்கிளுடன் குடிபோதையில் தவறி விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை கண்ட கிருஷ்ணன் அங்கு சென்று அறிவுரை கூறி உதவி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கட்டைபோஸ் கிருஷ்ணனை கண்டித்ததுடன் மதுபாட்டிலால் அவரை தலையில் தாக்கினாராம். இதனை கண்ட அப்பகுதியினர் ஓடிவந்து கட்டைபோசை கண்டித்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து செல்வதுபோல் நடித்துவிட்டு மீண்டும் பின்னால் வந்து மதுபாட்டில் மற்றும் கத்தியால் கிருஷ்ணனை குத்திஉள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மதுபோதையில் கிடந்த கட்டைபோஸ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா அங்கு விரைந்து சென்று விசாரணை செய்ததுடன் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனுக்கு மாலதி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Next Story