உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா


உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

சத்தீஸ்கார் மாநிலம் ராய்கரில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணை மின் நிலையம் வரை உயர் மின்கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் வழியாக பெரிய கூத்தம்பட்டி, சின்ன கூத்தம்பட்டி, செட்டிகொள்ளை, தலையன்கொட்டாய், தேவீரஅள்ளி, குடிமேனஅள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க ஒரு சில விவசாயிகளிடம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பல விவசாய நிலங்களில் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் மின்கோபுரம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், குடிமேனஅள்ளி கிராமத்திற்கு நேற்று முன்தினம் மின்கோபுரம் அமைக்க அளவீடு செய்தவற்காக போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் சென்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 2 பெண்கள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் வருவாய்த்துறையினர் அங்கிருந்து சென்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

அதன்படி பேச்சுவார்த்தைக்காக விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் சென்றனர். அந்த நேரம் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் தலைமையில், உயர் மின்கோபுரம் அமைக்க ஆதரவு தெரிவித்து வந்த விவசாயிகளை உதவி கலெக்டர் சரவணன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத் மற்றும் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு 4 விவசாயிகளை மட்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு அனைவரும் வருவோம். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தையை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகள் - விவசாயிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் ஆத்திரம் அடைந்து உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உதவி கலெக்டருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் கேள்வி கேட்டால் போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர். விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைப்பதால், நிலத்தின் மதிப்பு முற்றிலும் இழக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கோபுரம் அமைக்க இழப்பீடு நான்கு மடங்கு உயர்த்தி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உயர்மின் கோபுரத்தின் நான்கு கால்கள் பதிக்கப்படும் இடத்தின் அளவிற்கு மட்டுமே இந்த பண உயர்வு. உயர்மின் பாதையின் கீழ் விவசாயமோ, போர்வெல் பம்போ, வீடுகளோ கட்டக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த இடத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் போகிறது. உயர்மின் கோபுரம் அமைக்காமல், சாலை வழியாக கேபிள் அமைத்து மின்பாதையை கொண்டு செல்லலாம். கேரளாவில் அவ்வாறு தான் நடைமுறையில் உள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மீறி உயர்மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை தொடர்ந்தால், போராட்டங்கள் தீவிரமாகும். மேலும் கோட்டை நோக்கி பேரணியும் செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story