ஆன் லைனில் சான்றிதழ்களை சரிபார்க்க மடிக்கணினி வழங்கப்படவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள்


ஆன் லைனில் சான்றிதழ்களை சரிபார்க்க மடிக்கணினி வழங்கப்படவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:38 AM IST (Updated: 15 Jun 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஆன் லைனில் சான்றிதழ்களை சரிபார்க்க மடிக்கணினி வழங்கப்படவில்லை எனக் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

வேலூர்,

வாலாஜா, நெமிலி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆன் லைனில் சான்றிதழ்களை சரிபார்ப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் மாவட்ட இணையதள மேலாளர் நிவேதிதா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

அப்போது அவர், ஆன் லைனில் சான்றிதழ்களை சரிபார்ப்பது குறித்தும், சான்றிதழ்களை சரிபார்த்து வருவாய் ஆய்வாளருக்குப் பரிந்துரை செய்வது குறித்தும் விளக்கி கூறினார். மேலும் அவர், சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ள மனுதாரரின் விடுபட்ட ஆவணங்களை இணைப்பது தொடர்பாகவும் பயிற்சி அளித்தார்.

கூட்டத்தின்போது கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ்களை சரிபார்க்க இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும், மடிக்கணினி வழங்கப்பட்டவர்களுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். அதில் வாலாஜா தாலுகாவைச் சேர்ந்த 67 கிராம நிர்வாக அலுவலர்கள், நெமிலி தாலுகாவைச் சேர்ந்த 43 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்பட 20 வகையான சான்றிதழ்கள் ஆன் லைனில் சரிபார்த்து, அதனை வருவாய் ஆய்வாளருக்குப் பரிந்துரை செய்து வருகிறோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 50 சதவீத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் சான்றிதழ்களை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை.

மடிக்கணினி வழங்கப்பட்டவர்களுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கவில்லை. ஆன் லைனில் சான்றிதழ்களை சரிபார்க்கும்போது விண்ணப்பித்த மனுதாரரின் ஏதாவது ஆவணங்கள் விடுபட்டிருந்தால், அதனை பெற்று சமர்ப்பிக்கிறோம். அதனால் இணையதள செலவு அதிகமாகிறது. எனவே அரசு இணையதள செலவிற்கான தொகையை வழங்க வேண்டும். 40 சதவீத கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்வசதி இல்லை. இந்தக் குறைபாடுகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story