வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராம மக்களிடம் உரையாற்றிய மோடி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்பு


வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராம மக்களிடம் உரையாற்றிய மோடி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 2:15 AM IST (Updated: 15 Jun 2018 8:37 PM IST)
t-max-icont-min-icon

வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராம மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

நெல்லை, 

வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராம மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

டிஜிட்டல் இந்தியா திட்டம்

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் பணமில்லா பரிவர்த்தனை, ஆன்லைன் மூலமாக பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகள் இணையதளம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கிராமப்புற மக்களுக்கு திறன்மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, செல்போன் பயிற்சி, விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கிராமப்புறத்தை சேர்ந்த முதியோர்களுக்கு உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்தல், பொது சேவை அமைப்பு மூலம் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி உரையாற்றினார்

டிஜிட்டல் இந்தியா, கிராமப்புற மேம்பாட்டு திறன் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று கிராம மக்களிடையே உரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்க நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு எல்.இ.டி. டி.வி. அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அவரது பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு தனது பேச்சை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் திட்டத்தால் பயன்பெற்ற 15 பேர் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தில் எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளனர் என்பதை மோடி விளக்கி பேசினார். மேலும் கிராமப்புற மக்களுக்கு பொது சேவை மையம் மூலம் ஏற்படும் பயன்கள் பற்றி பேசினார். மோடியின் பேச்சை அங்குள்ள அதிகாரிகள் தமிழில் மொழி பெயர்த்து விளக்கி கூறினர். 11 மணிக்கு பிரதமர் தனது பேச்சை முடித்தார்.

2 லட்சம் பேர்

இதுகுறித்து பொது சேவை மைய மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத்குரியா கோஸ் நிருபர்களிடம் கூறும் போது, “ மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 212 இடங்களில் பொது இ–சேவை மையங்கள் உள்ளன. இந்த சேவை மையம் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்“ என்றார்.


Next Story