தேனி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அகலாத பிரச்சினை நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை


தேனி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அகலாத பிரச்சினை நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2018 3:30 AM IST (Updated: 16 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தேனி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும் நெரிசல், போக்குவரத்து இடையூறு போன்ற பிரச்சினைகள் அகலவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி,

தேனி நகரில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை சாலை மற்றும் பெரியகுளம் சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மேற்கூரை, பந்தல் போன்றவற்றை நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இணைந்து அகற்றி உள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. இருந்த போதிலும், இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையால் நகரில் போக்குவரத்து நெரிசலோ, போக்குவரத்து இடையூறோ குறையவில்லை. தொடர்ந்து பழைய நிலைமையே நீடிக்கிறது.

இதற்கு காரணம், சாலையோரம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போதிலும், அப்பகுதிகள் மேடு, பள்ளமாகவும், மண் திட்டுகளாகவும் காட்சி அளிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு, சாலையோரம் உள்ள பகுதிகளை சமப்படுத்தினால் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்திக் கொள்வதற்கு போதிய இடவசதி கிடைக்கும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்க முடியும்.

ஆனால், சாலையோர பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் கூட நிறுத்த முடியாத அளவுக்கு மேடான பகுதியாக உள்ளதால் வாகனங்கள் தொடர்ந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சாலைக்கும், சாலையோர பகுதிகளுக்கும் இடையே மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் மழை பெய்தால் மழைநீர் சாலையில் இருந்து சாலையோரத்தில் உள்ள வடிகால் வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

எனவே, மழைநீர் வடிந்து செல்லும் அளவுக்கு சாலையோரம் உள்ள மண்ணை அப்புறப்படுத்தவும், மண் திட்டுகளை அகற்றி சமப்படுத்தவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு சாலையோர பகுதிகளை சமப்படுத்தினால் சாலையோரம் வாகனங்கள் நிறுத்த அதிக அளவில் இட வசதி கிடைக்கும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.


Next Story