சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க புதிதாக 7 போலீஸ் அதிரடிப்படைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க 24 மணி நேரமும் தயாராக இருக்கும் வகையில், புதிதாக 7 போலீஸ் அதிரடிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்,
தூத்துக்குடியில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்ற போது, கலவரம் உருவானது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பதற்றத்தை தணிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு கலவரம் உருவாகும் முன்பே, தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 3 போலீஸ் அதிரடிப்படைகள் உள்ளன.
இந்த நிலையில் கூடுதலாக அதிரடிப்படைகளை அமைக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் நகர், புறநகர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல் ஆகிய 7 போலீஸ் உட்கோட்டங்களுக்கும் தலா ஒரு போலீஸ் அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அதிரடிப்படையினர் கலவரம், சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் இடத்துக்கு விரைவாக சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக சப்–இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட அதிரடிப்படையில் அனைவரும் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் லத்திகள், தடுப்புகள், மெகா விளக்குகள், ஒலிபெருக்கி போன்றவை வைத்திருக்க வேண்டும். அதேபோல் அவர்கள் அனைவரும் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக சுழற்சி முறையில் இந்த அதிரடிப்படைக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.