கடலுக்கு சென்ற விசைப்படகு கவிழ்ந்தது: தத்தளித்த 5 மீனவர்கள் உயிருடன் மீட்பு


கடலுக்கு சென்ற விசைப்படகு கவிழ்ந்தது: தத்தளித்த 5 மீனவர்கள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 4:45 AM IST (Updated: 16 Jun 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் தத்தளித்த 5 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று இரவு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 35), கான் (40), தமிழ்செல்வம் (50), சேகர் (45), திருகண்ணன் (50) ஆகிய 5 பேரும் சென்றனர். இந்தநிலையில் விசைப்படகு 5½ நாட்டிக்கல் தொலைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விசைப்படகின் கீழ் பகுதியில் ஓட்டை விழுந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நீரை படகில் இருந்து வெளியே ஊற்றி கொண்டிருந்தனர். இருப்பினும் ஓட்டை பெரிதாகி படகு கொஞ்சம், கொஞ்சமாக முழுவதும் மூழ்கியது

இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் அங்கிருந்த பலகை, டீசல் கேன்கள் ஆகியவற்றை பிடித்து கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதைக்கண்ட ஜெகதாப்பட்டினம் ராமதேவர் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த சகமீனவர்கள், கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் மீட்டு தங்களது படகில் ஏற்றி கொண்டனர்.

பின்னர் உடனடியாக கரைக்கு திரும்பி வந்தனர். தடைக்காலம் முடிந்து முதல்நாளில் கடலுக்கு சென்ற விசைப்படகு மூழ்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேதமடைந்த விசைப்படகிற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story