விவசாய உற்பத்தி திட்டங்களுக்கு மானிய உதவி பெற 8 வட்டாரங்களில் சிறப்பு முகாம்


விவசாய உற்பத்தி திட்டங்களுக்கு மானிய உதவி பெற 8 வட்டாரங்களில் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 16 Jun 2018 4:25 AM IST (Updated: 16 Jun 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

விவசாய உற்பத்தி திட்டங்களுக்கு மானிய உதவி பெற 8 வட்டாரங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தர்மபுரி,

விவசாய உற்பத்தி திட்டங்களுக்கு மானிய உதவி பெற தர்மபுரி மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் சிறப்பு முகாம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2018-2019-ம் ஆண்டில் அரசின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், நுண்ணீர் மற்றும் தெளிப்பு நீர்பாசன திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இதேபோல் நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம், கூட்டுப்பண்ணைய திட்டம், பிரதமமந்திரி பயிர்காப்பீட்டுத்திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டங்களின் கீழ் மானிய உதவி பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக் கிழமை) தர்மபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய 8 வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை விவசாயிகள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த முகாமிற்கு விவசாயிகள் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறுகுறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களோடு செல்ல வேண்டும். இந்த முகாமில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story