சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்துடன் போலீசில் ஆஜர்


சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்துடன் போலீசில் ஆஜர்
x
தினத்தந்தி 16 Jun 2018 5:03 AM IST (Updated: 16 Jun 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி நேற்று குடும்பத்துடன் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். சாமியார் மனதை மாற்றியதால் தற்கொலை முடிவை அவர்கள் கைவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி ரங்கநாயகி(வயது 56). இவர் சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் கிரிதரன். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரங்கநாயகி தனது கணவர் மற்றும் மகனுடன் திடீரென மாயமானார்.

இவர்கள் தற்கொலை செய்ய போவதாக தகவல்கள் வெளியானதால் இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் மீண்டும் சேலம் வந்த ரங்கநாயகி நேற்று குடும்பத்துடன் ஆட்டோவில் வந்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் வீட்டைவிட்டு சென்றதற்கு சில விளக்கங்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது.

கிரிதரனின் மனைவிக்கும், ரங்கநாயகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரங்கநாயகி தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து மேட்டூருக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் அங்கிருந்து மாதேஸ்வரன் மலைக்கு சென்றனர். அப்போது அவர்களை அங்கிருந்த சாமியார் ஒருவர் அழைத்து பேசினார்.

அந்த சாமியாரிடம் நடந்த விவரங்கள் அனைத்தையும் ரங்கநாயகி கூறியதுடன், தாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரங்கநாயகி மற்றும் அவருடைய கணவரிடம் அந்த சாமியார், நீங்கள் வாழ்ந்து விட்டீர்கள், இளம் வயதாக உள்ள உங்கள் மகன் வாழ வேண்டாமா? என்பன உள்பட சில நல்ல கருத்துக்களை கூறி சமாதானப்படுத்தினார். இது அவர்களுக்கு தற்கொலை செய்யும் முடிவை மாற்றியது.

இதையடுத்து ரங்கநாயகி தனது குடும்பத்துடன் காசி, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு சேலம் திரும்பி உள்ளார்கள். தற்போது ரங்கநாயகி குகை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Next Story