கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு விலை குறைத்து நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் கவலை
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை வாரியம் அறிவித்த விலையை காட்டிலும் குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மஞ்சூர்,
நிலகரி மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இதனை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் வாராந்திர விலை நிர்ணயமும், கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையை தவிர மற்ற 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் மாதாந்திர விலை நிர்ணயமும் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கான விலையை மேற்கண்ட தொழிற்சாலை மேலாண்மை அதிகாரிகள் முன்னிலையில் இன்கோ சர்வ் நிர்வாகம் விலை நிர்ணயம் செய்கிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திற்கான விலை கீழ்க்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:–
மஞ்சூர், குந்தா (எடக்காடு), கரும்பாலம், கைக்காட்டி, பிக்கட்டி ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.11 எனவும், சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.12.50 எனவும், பந்தலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.12 எனவும், இத்தலார், நஞ்சநாடு, பிராண்டியர் ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.10.30 எனவும், மேற்கு நாடு, மகாலிங்கா, கிண்ணக்கொரை, எப்ப நாடு, பிதர்காடு ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.10 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேயிலை வாரியம் கடந்த மாதத்தில் நிர்ணயத்த தொகையோ ரூ.14 ஆகும்.
இந்த விலை நிர்ணயத்தை அனைத்து தொழிற்சாலைகளும் கட்டாயமாக வழங்கிட தேயிலை வாரியம் உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.3 முதல் 4 வரை குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளர். எனவே, தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையை நிர்ணயம் செய்வதுடன் கடந்த 3 ஆண்டுகளாக தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலைக்கான நிலுவை தொகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என ஒட்டு மொத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.