அருப்புக்கோட்டையில் பள்ளிவாசலுக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
அருப்புக்கோட்டையில் பள்ளிவாசலுக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வாழவந்தபுரத்திலுள்ள சின்னபள்ளிவாசல் ஜமாத்தலைவருக்கு கடந்த 14–ந் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் ரம்ஜான் அன்று பள்ளிவாசலையும் அதனையடுத்துள்ள பள்ளியையும் மனித வெடிகுண்டாக மாறி தகர்ப்போம் என்றும் நாங்கள் இந்துக்கள் அல்ல, சாதி வெறியர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் எங்கள் தற்கொலை படையில் ஒரு பெண் உள்பட 3 தீவிரவாதிகள் உள்ளோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தை அனுப்பியவர்களது முகவரியாக அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரும் ராமசாமிபுரத்தை சேர்ந்த ஒருவரது பெயரும் இருந்தது. இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பலமுருகன் தீவிரவிசாரணை நடத்தினார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் கடிதத்தை அனுப்பவில்லை என்று தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கணேஷ்நகரை சேர்ந்த ஒளிமுத்து (வயது48) என்பவர் மீது சந்தேகம் பிறந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது அவர் மிரட்டல் கடிதம் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். கொடுங்கல்– வாங்கலில் காந்திநகர் மற்றும் ராமசாமிபுரத்தை சேர்ந்த இருவருடன் தகராறு இருந்ததால் அவர்களை போலீசில் சிக்க வைக்கும் எண்ணத்துடன் கடிதத்தை அனுப்பியதாக ஒளிமுத்து தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்தனர். ஒளிமுத்து இதேபோல நரிக்குடியில் உள்ள நகராட்சி பள்ளிக்கு சில மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.