கண்ணமங்கலத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா


கண்ணமங்கலத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா
x
தினத்தந்தி 16 Jun 2018 11:32 PM GMT (Updated: 16 Jun 2018 11:32 PM GMT)

கண்ணமங்கலத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. விழாவில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம் வரவேற்றார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பயணிகள் நிழற்குடையையும், கல்வெட்டையும் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘கண்ணமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் தான் நான் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படித்தேன். இந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு கண்ணமங்கலம் பகுதி தான் முக்கிய போக்குவரத்து வழியாகும். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. மக்களின் பேராதரவோடு இன்னும் 3 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடைபெறும். ஆனால் வேண்டுமென்றே சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த அரசு மீது அவதூறு பேசுகின்றனர். அதை மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்’ என்றார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘ஆரணி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆசியோடு, முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்’ என்றார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி மோகன், பேரூராட்சிகளின் பொறியாளர் இசக்கி, வக்கீல் சங்கர், முன்னாள் கவுன்சிலர் திருமால், பாரிபாபு, இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், பால் கூட்டுறவு சங்க தலைவர் குமார், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.ஏழுமலை, வார்டு கவுன்சிலர் ருக்மணி, எம்.பாண்டியன், அரையாளம் வேலு, பி.ஆர்.ஜி.சேகர், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் கணேசன் நன்றி கூறினார். 

Next Story