கர்நாடக மந்திரிசபை மீண்டும் விரிவாக்கம் காங்கிரஸ் மேலிடம் முடிவு


கர்நாடக மந்திரிசபை மீண்டும் விரிவாக்கம் காங்கிரஸ் மேலிடம் முடிவு
x
தினத்தந்தி 17 Jun 2018 5:21 AM IST (Updated: 17 Jun 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பதவி கிடைக்காமல் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதால் அடுத்த வாரம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் உள்ளனர். மேலும் கடந்த 6-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 பேரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 பேரும் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில், காங்கிரஸ் வசம் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) வசம் ஒரு இடமும் இருக்கிறது.

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் மந்திரிகள் எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், சதீஸ் ஜார்கிகோளி, தன்வீர் சேட் உள்ளிட்டோர் மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களுடன் பதவி கிடைக்காத 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து கொண்டு கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் விதமாக மந்திரிசபையை மீண்டும் விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. ஆனால் மந்திரிசபையில் காலியாக 6 இடங்களில் 4 இடங்களை மட்டுமே நிரப்ப கட்சி மேலிடம் தீர்மானித்து இருக்கிறது. குறிப்பாக மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள முன்னாள் மந்திரிகளில் ஒருவருக்கும், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 2 பேருக்கும், குருபா சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும் மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்துள்ளது.

ஏற்கனவே மந்திரிசபையில் லிங்காயத் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும், துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அந்த சமூகத்தை சேர்ந்த 2 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்.பி.பட்டீல், சங்கமேஷ்வர், பி.சி.பட்டீல், சரணபசப்பா தர்சணப்புரா ஆகிய 4 பேரில், 2 பேருக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல, மூத்த தலைவர்களில் ராமலிங்கரெட்டி அல்லது எச்.கே.பட்டீல் ஆகியோரின் பெயர்களை கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. முதல்-மந்திரி குமாரசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

அந்த கூட்டம் முடிந்த பின்பு காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து குமாரசாமி பேச உள்ளதாகவும், அப்போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு, கர்நாடக மாநில தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த வாரம் மந்திரிசபையை மீண்டும் விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. 

Next Story