பெண்களுக்கான வேலை வாய்ப்பு (கால்நடை தீவனத்தை பதப்படுத்தி சேமிக்கும் முறை)
வீ டுகளிலும், பண்ணை அமைத்தும் கால்நடை களை வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வீ டுகளிலும், பண்ணை அமைத்தும் கால்நடை களை வளர்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கறவை மாடுகளையும், ஆடுகளையும் வளர்ப்பவர்கள் தீவன மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியதிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் வறட்சிகாலத்திலும், கோடை காலத்திலும் தீவன பற்றாக்குறை ஏற் படுவது இயல்பு. அதை சமாளிக்க, தீவன பயிர்கள் அதிகளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேகரித்து பதப்படுத்தி, சேமித்து வைக்கவேண்டும்.
எந்த வகை தீவனத்தை, எப்படி சேகரித்து, சேமிக்கவேண்டும் என்பதை பற்றி இந்த வாரம் பார்ப்போம்!
கால்நடைகளுக்கு தீவனமாக நாம் வழங்கும் பசும்புல்லில் 60 முதல் 90 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளது. ஆனால் பயறு வகை தீவனங்களில் ஈரப் பதம் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், இதர குறிப்பிட்ட தீவன பயிர்களில் 80 சதவீதத்துக்கு குறைவாகவும் ஈரப்பதம் இருப்பதுண்டு.
பசுந்தீவன பயிர்களில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் அவை எளிதில் கெட்டுவிடும். ஆகவே பசுந்தீவன பயிர்களின் ஈரப்பதத்தை 10 முதல் 12 சதவீதம் வரையில் குறைத்தால்தான் சேமிக்க முடியும். அதற்காக நாம் வெயிலில் உலர்த்தும் முறையை கடைப்பிடிக்கிறோம். ஆனால் பசுந்தீவனங்களை அறுவடைசெய்யும் காலத்தில் சூரிய ஒளி கிடைக்காமல் போனாலோ, தொடர்ச்சியாக மழை பெய்தாலோ உலரவைத்து ஈரப்பதத்தை குறைக்க முடியாது. அதுபோன்ற சமயத்தில் பசுந்தீவனத்தை ஊறுகாய் புல்லாக மாற்றி பயன்படுத்தலாம்.
உலர் புல் தயார் செய்தல்
தீவன பயிர்களை அறுவடை செய்த பின்னும் அவைகளில் வளர்சிதை மாற்றங்கள் நிகழும். அறுவடைக்கு பின்பு தீவன பயிர்களில் உள்ள சத்துகளின் அளவு குறையும். அதே நேரம் அவைகளில் பூஞ்சை நச்சுக்கள் உற்பத்தியாகும். ஆகையால் மிக கவனமாக உலர் புல் தயார் செய்யவேண்டும். அதாவது அறுவடை செய்த பசும்புல்லில் உள்ள ஈரப்பதத்தில் 10 முதல் 15 சதவீதத்தை விரைவாக குறைத்திட வேண்டும். உலர் புல் தயாரிக்கும் போது இலைப்பகுதி விரயம் ஆவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இலைப்பகுதியில் தான் தண்டு, வேர் பகுதிகளை விட அதிகளவில் சத்துகள் உள்ளன.
உலர்புல்லின் வகைகள்:
பயறு வகை தீவனப்பயிர்களான தட்டைபயறு, கொள்ளு, நரிப்பயறு, சணப்பு, முயல் மசால், குதிரை மசால், சோயா பீன், தக்கைபூண்டு மற்றும் நிலக்கடலை போன்றவற்றில் உள்ள கால்நடைகளுக்கான தீவனத்தை வெயிலில் உலரவைத்து, உலர் புல்லாக மாற்றி பயன்படுத்தலாம்.
பொதுவாக பயறு வகை தீவனங்களை கடும்வெயிலில் உலர வைக்கும்போது இலைத் தழைகளின் இழப்பு அதிகமாக இருக்கும். எனவே காலை, மாலைவேளையில் வெயில் குறைவாக இருக்கும் சமயத்தில் உலரவைத்தால் போதுமானது. இதன் மூலம் இலைத் தழைகள் வீணாகாமல் தடுக்கலாம். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் இந்த பயறுவகை தீவனங்களில்தான் கால்நடைகளுக்கு தேவையான புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. பயறு வகையை சாராத சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, ஓட்ஸ் போன்ற கால்நடை தீவனப்பயிர்களையும் உலர்த்தி உலர் புல்லாக தயார்செய்து பயன்படுத்தலாம்.
வீட்டின் அருகே குறைந்த அளவில் நிலம் இருந்தாலும், அதில் பயறு வகை மற்றும் பயறு வகை சாராத தீவனபயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு அவற்றை ஒன்றாக அறுவடை செய்தும் உலர்புல் தயார் செய்யலாம். இவை இரண்டையும் சேர்த்து உலர்புல்லாக்கி கால்நடைகளுக்கு வழங்கினால், அவைகளுக்கு சமச்சீர் தீவனம் கிடைக்கும். (பயறுவகை தீவனத்தில் புரதச்சத்து 15 முதல் 25 சதவீதமும், பயறு வகை சாராத தீவனத்தில் புரதத்தின் அளவு 5 முதல் 10 சதவீதம் வரையிலும் இருக்கும்)
உலர்புல்லிற்கு தயார் செய்பவைகளில் பசுமையான இலைகள் நிறைந்திருக்க வேண்டும். எளிதில் செரிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். மண், அழுக்கு மற்றும் களை செடிகள் இன்றி சுத்தமாக இருக்க வேண்டும். பூஞ்சாண் பாதிப்பும் இருக்கக்கூடாது.
உலர்புல் தயாரிக்கும் முறையிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். அறுவடை செய்த தீவன பயிர்களை நிலத்தில் பரப்பி அவ்வப்போது திருப்பிப்போட வேண்டும். சோளம், கம்பு, ராகி போன்ற பயிர்களை அறுவடை செய்த பின், அதன் தட்டைகளை சிறு கத்தைகளாக கட்டி உலர வைக்கலாம். அவ்வப்போது இந்த கத்தைகளை திருப்பிப்போடவும் வேண்டும். மேலும் தீவன பயிர்களை கூம்பு வடிவத்தில்கட்டி நிற்க வைத்தும் உலரச் செய்யலாம்.
மழை மற்றும் பனி காலங்களில் போதிய வெயில் கிடைக்காத போது சூரிய சக்தி உலர்கலன்களை பயன்படுத்தலாம். தற்போது சூரிய உலர் கலன்களை அமைக்க ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை செலவாகும்.
ஊறுகாய் புல் தயாரித்தல்
பசுந்தீவன பயிர்களை அதிக ஈரப்பதத்துடன் காற்றுப்புகாமல் கொதிக்க வைப்பதன் மூலம் ஊறுகாய் புல் கிடைக்கிறது. பசுந்தீவனங்கள் தேவைக்கு அதிகமாக கிடைக்கும்போதும், பசுந்தீவன பயிர்களை உலர வைப்பதற்கு போதிய சூரிய ஒளி கிடைக்காத மோசமான வானிலை நிலவும்போதும் ஊறுகாய் புல் தயார் செய்து, தீவனத்தை சேமித்து வைக்கலாம். அதுமட்டுமின்றி, முற்றிப்போன தடிமனான தண்டுகள் கொண்ட தீவன பயிர்களையும் இம் முறையில் பதப்படுத்தி, அதன் தரத்தை மேம்படுத்தலாம்.
மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி போன்ற தானியங்களின் தீவன பகுதிகளும் ஊறுகாய் புல்லுக்கு ஏற்றவை. பயறுவகை தீவன பயிர்களை மற்ற தீவன பயிர்களுடன் கலந்து அல்லது சர்க்கரை பாகு, தானியங்கள் போன்ற மாவு சத்து அதிகம் உள்ள பொருட்களுடன் சேர்த்தும் பதப்படுத்தலாம்.
ஊறுகாய் புல் தயாரிப்புக்கு பூக்கும் பருவத்தில் உள்ள தீவன பயிர்களை அறுவடை செய்து பயன் படுத்த வேண்டும். ஊறுகாய் புல் தயாரிக்க பயன் படுத்தும் குழியின் ஆழம் மற்றும் அகலம் கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும். ஊறுகாய் புல் குழியில் முதலில் பசும்புல்லைக் கொட்டவேண்டும். புல்லின் 2 சதவீத அளவுக்கு கரும்பு சர்க்கரை பாகுவை பயன்படுத்தவேண்டும். குழியில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு தேவையான மாவுசத்து சர்க்கரை பாகு மூலம் எளிதில் கிடைப்பதால் அதிக அளவு லாக்டிக் அமிலம் உற்பத்தியாகி புல் நன்கு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
தானியங்களை பொறுத்தவரையில் சோளம், கம்பு, மக்காச் சோளம், ராகி, குருணை அரிசி போன்ற தானியங்களை 4 முதல் 5 சதவீதம் சேர்க்கலாம். மேலும் அசிடிக் அமிலம், சிட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், புரபியோனிக் அமிலம் போன்றவைகளையும் ஒரு சதவீதம் வரை சேர்க்கலாம். தயிர், மோர் மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்புக்கான தனிப்பட்ட சிறப்பு நுண்ணுயிர் கலவை போன்றவைகளையும் தேவைக்கு ஏற்ப குழியில் சேர்க்க வேண்டும். அதோடு 1 சதவீதம் வரையில் சுண்ணாம்பு தூளையும் சேர்க்கலாம். இதன் மூலம் கால்சியம் சத்து கால்நடைகளுக்கு கிடைக்கும்.
இதற்காக உருவாக்கப்படும் குழி மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகா வண்ணம் அமைக்கப்பட வேண்டும். குழியை சுற்றிலும் உள்ள பகுதி பாதுகாப்பானதாக, விரிசல் இல்லாததாக இருக்கவேண்டும். குழி அமைக்க முடியாத இடங்களில் சிமெண்டு கோபுரம் அமைத்து அதில் ஊறுகாய் புல் தயார் செய்யலாம். தண்ணீர் தொட்டி, பெரிய பிளாஸ்டிக் கேன், பாலித்தீன் பைகள் போன்றவற்றிலும் ஊறுகாய் புல் தயாரிக்கலாம்.
முதலில் குழியில் சிறிதளவு வைக்கோல் அல்லது உலர்ந்த புல்லை பரப்ப வேண்டும். பின் தீவன பயிர்களை சிறு சிறு துண்டு களாக நறுக்கி ஊறுகாய் புல் குழியில் இட்டு நிரப்ப வேண்டும். குழி நிரப்புதலை ஓரிரு நாட்களில் முடித்து விட வேண்டும். மழை பெய்யும் காலங்களில் குழியை நிரப்ப கூடாது. நில மட்டத்துக்கு மேல் 5 அடி உயரம் வரை நிரப்பிய பின், வைக்கோலை பரப்பி அதன் மீது மண் கொண்டு காற்று புகா வண்ணம் மொழுக வேண்டும்.
பசுந்தீவனத்திற்கு தேவையான 10 கிலோ உப்பு மற்றும் 20 கிலோ வெல்லத்தினை 30 லிட்டர் தண்ணீரில் கரைத்து பின்பு அடுக்கி வைத்த பசும் புல்லின் மேல் தெளிக்க வேண்டும். திரும்பவும் பசும்புல்லை அரை அடி உயரம் அடுக்கி முன்பே கூறியது போல் வெல்ல உப்பு கரைசலை தெளிக்க வேண்டும். இது ஆயிரம் கிலோ அளவு கொண்ட புல்லுக்கு போதுமானதாகும்.
இதுபற்றிய கூடுதல் தகவல்களையும், விளக்கங்களையும் நேரடி அனுபவம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பசும்புல்லில் சுமார் 55 முதல் 60 நாட்களில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மஞ்சள் நிறத்தில் பதப்பட்டுவிடும். அதன் பிறகு இந்த பசும் புல்லை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஒரு கறவை மாடு தினமும் 25 கிலோ வரை இந்த ஊறுகாய் புல்லைத்தின்னும்.
(அடுத்த வாரம்: வைக்கோல் மற்றும் கரும்பு சோகையை ஊட்டமேற்றும் வழிமுறைகள்)
தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.
Related Tags :
Next Story