திருமணத்தில் புதுமை
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த புதுமண ஜோடியினர் தங்கள் திருமணத்தை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் களமாக மாற்றி இருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த புதுமண ஜோடியினர் தங்கள் திருமணத்தை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் களமாக மாற்றி இருக்கிறார்கள். திருமண மண்டபத்திலேயே கண்தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் பற்றிய முகாம்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். திருமணத்திற்கு வந்தவர்களில் ஏராளமானோரும் தங்கள் உறுப்புகளை தானம் செய்வதற்கும் முன்வந்திருக்கிறார்கள்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மணமக்கள் மரக்கன்றுகளை வழங்கியதோடு அவைகளை வீட்டில் வளர்ப்பதை செல்பி எடுத்து அனுப்பும் விதமாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களும் திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்படவில்லை. சில்வர் டம்ளர்கள், தட்டுகள்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
திருமணத்தை சமுதாய விழிப்புணர்வு களமாக மாற்றிய அந்த தம்பதியரின் பெயர் பூஜா-தேவந்திர பதாக். இந்த ஏற்பாடுகளை பூஜாவின் சகோதரர் ஓம்கார் முன்னின்று செய்திருக்கிறார். அதுபற்றி அவர் சொல்கிறார். ‘‘எங்கள் வீட்டில் இதுதான் முதல் திருமணம். சில மாதங்களுக்கு முன்பு எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவருக்கு உரிய நேரத்தில் ரத்த தானமும், உடல் உறுப்பு தானமும் கிடைக்கவில்லை. அதனால் உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எங்கள் வீட்டு திருமணம் அமைந்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்தார்கள். அவர்கள் உறவினர்கள் பலர் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்வதற்கும் முன்வந்தார்கள்.
ரத்த தானத்தை போலவே உடலுறுப்பு தானமும் அவசியமானது. நாம் உயிரிழந்த பிறகும் நம்முடைய உறுப்புகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். நாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் 20-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு பதிவு செய்திருக்கிறார்கள். திருமணத்தின்போது வினியோகிக்கப்படும் மரக்கன்றுகளை நிறைய பேர் தங்கள் வீடுகளில் நடுவதில்லை. மரக்கன்று நடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் அவர்கள் வீட்டில் நட்டிருக்கும் மரக்கன்றுடன் எடுத்த போட்டோவை பதிவிட செய்திருக்கிறோம். முதலாம் ஆண்டு திருமண நாளின்போது நாங்கள் கொடுத்திருக்கும் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்திருப்பவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசு வழங்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்கிறார்.
Related Tags :
Next Story