ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தீவிர நடவடிக்கை அமைச்சர் மணிகண்டன் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தகவல் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதார துறையின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தாய்ப்பால் வங்கி ஆகியவற்றின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு சி.டி.ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய மக்கள் நவீன முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் எண்ணற்ற மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருந்து வாணிபக் கழகம் சார்பில் ரூ1 கோடியே 30 லட்சம் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென்று புதியதாக நவீன சி.டி. ஸ்கேன் மையம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் சி.டி ஸ்கேன் நான்கு அடுக்கு முறையில் உள்ளது. மருத்துவ கல்லு£ரிக்கு இணையான மருத்துவம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது நிறுவப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் 16 அடுக்கு முறையில் உள்ளது. இதன் மூலம் மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளில் உள்ள தமனிகளில் ஆஞ்சியோகிராம் எடுக்க முடியும். மேலும் இது வேகமாகவும் சிறந்த தெளிவான படங்களையும் தரவல்லது.
மேலும் ரூ.50 லட்சம் செலவில் 5 புதிய செயற்கை சுவாச கருவிகள் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர பிரிவு முறை சிறப்பாக செயல்படுவதற்காக நிறுவப்பட்டுஉள்ளன. இதன்மூலம் இயற்கையான சுவாசம் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு அவர்களை காப்பாற்ற முடியும். மேலும் உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ காலத்தில் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் சிசுக்களுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலை ஏற்பட்டால் அந்த சிசுக்களுக்கு தாய்ப்பால் தருவதற்காக கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி என ரூ.6 லட்சம் மதிப்பில் தமிழக அரசால் வழங்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
இதில் தன்னார்வ தொண்டு முறையில் தாய்ப்பால் பெறப்பட்டு அதன்பின் அது சுத்திகரிக்கப்பட்டு உறை நிலையில் 6 மாதம் வரை சேமித்து வைக்கப்படுகிறது.
சேமித்து வைக்கப்பட்ட பால் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
புட்டிப்பாலை காட்டிலும் தாய்ப்பாலில் அதிக நன்மைகள் உள்ளது. இந்த புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், நிலைய மருத்துவர் ஞானக்குமார் உள்பட அரசு மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.