2–வது நாளாக கவர்னர் கிரண்பெடி அதிரடி: தனியார் மருத்துவ மனை, ரசாயன தொழிற்சாலையில் ஆய்வு
நிலத்தடி நீர் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது தொடர்பாக தனியார் மருத்துவமனை, ரசாயன தொழிற்சாலையில் 2–வது நாளாக நேற்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார்.
காலாப்பட்டு,
புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமம் மற்றும் நகர பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் முறைகேடாக நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்படுவதாக புகார்கள் சென்றன.
இதனையடுத்து நேற்று முன்தினம் அய்யங்குட்டிப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையில் கவர்னர் கிரண்பெடி அதிரடியாக ஆய்வு செய்தார். அப்போது அங்கு நிலத்தடி நீர் தொடர்பாக அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொழிற்சாலைகளில் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன் மழைநீர் சேகரிப்பு முறையாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவர்னர் கிரண்பெடி 2–வது நாளாக நேற்று சென்றார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து 20–க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அவர் அரசு பஸ்சில் சென்றார். அங்கு மருத்துவமனை நிர்வாகத்திடமும், அரசு அதிகாரிகளிடமும் மருத்துவமனையில் நிலத்தடி நீர் ஒருநாளைக்கு எவ்வளவு லிட்டர் எடுக்கப்படுகிறது, அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டார். நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
இங்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்ட பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கிரண்பெடி ஆலோசனை நடத்தினர்.
இதனைதொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கும் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வு செய்தார். அந்த தொழிற்சாலையில் நிலத்தடி நீர், மழைநீர் சேகரிப்பு தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.