மாநகராட்சி ஊழியர் வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


மாநகராட்சி ஊழியர் வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Jun 2018 4:00 AM IST (Updated: 18 Jun 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் மாநகராட்சி ஊழியரை வெட்டிக்கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு அமராஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 40). இவர், சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை சிவக்குமார், காசிமேடு காசிபுரம் ‘பி’ பிளாக்கில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிவக்குமாரை சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் மர்மகும்பல், அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சிவக்குமாரை சரமாரியாக வெட்டியது.

இதில் அவருக்கு தலை, முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த சிவக்குமார், சூரியநாராயணன் செட்டித்தெருவில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிவக்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார், சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிவக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருவது தெரிந்தது. கஞ்சா வியாபாரி பற்றி சிவக்குமார் அடிக்கடி போலீசுக்கு தகவல் தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.

எனவே தற்போது சிறையில் உள்ள அவர், தனது ஆதரவாளர்களை ஏவி சிவக்குமாரை கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலையுண்ட சிவக்குமார், கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய மீனவ கிராம பஞ்சாயத்து சபை தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையான சிவக்குமாருக்கு குமுதா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story