பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Jun 2018 10:45 PM GMT (Updated: 17 Jun 2018 9:39 PM GMT)

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. சங்க தலைவர் செங்கோட்டுவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்களை நிறைவேற்றி தருமாறு அரசுக்கு தபால் மூலமாகவும் நேரடியாக சந்தித்து கொடுத்தும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே கோரிக்கைகள் தொடர்பாக மாநில பிரதிநிதிகளிடம் நேரடியாக பேச இடம், நேரம் ஒதுக்கி தர வேண்டும்.

விலைவாசி உயர்வால் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.27-ல் இருந்து ரூ.37-ஆகவும், எருமைபால் லிட்டருக்கு ரூ.29-ல் இருந்து ரூ.45 ஆகவும் கொள்முதல் விலை உயர்வு வழங்க வேண்டும். பால் விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பிறகு சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறும் போது, ‘பாலுக்கான கொள்முதல் உயர்வை உடனே உயர்த்த வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றாவிட்டால் பெரிய அளவில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். அதில் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். நாட்டுக்கு வளர்ச்சி தேவை என்பதால் பசுமை சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்றார்.

Next Story