சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Jun 2018 3:16 AM IST (Updated: 18 Jun 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழில் அதிபர். இவரது மகன் சாந்தகுமார் (வயது 25). இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கும் ஊத்துக்கோட்டையை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கும் நேற்று காலை ஊத்துக்கோட்டை அருகே உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி ஊத்துக்கோட்டையில் உள்ள பிரதான சாலைகளில் மணமக்களை வாழ்த்தி பதாகைகள் அமைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு சாலையில் இருந்து அலங்கரித்த குதிரை மீது அமர்ந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலத்துக்கு முன் உறவினர்கள் நடனம் ஆடி கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி புஷ்பா, ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் அங்கு வந்தனர். மணமகள் 10-ம் வகுப்பு படித்து வருவதாகவும், அவருக்கு 15 வயதுதான் ஆகிறது என்று மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. ஆகையால் மணமகளின் வயது சான்றை காண்பிக்கும்படி கூறினர்.

அதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு வீட்டார் மற்றும் மணமகன், மணமகளின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது. இதை தடுக்காதீர்கள் என்று அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம். அதை மீறி திருமணம் நடத்தினால் அனைவரையும் கைது செய்ய வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து நேற்று காலை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story