பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்


பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2018 4:30 AM IST (Updated: 18 Jun 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் நகரமலை பகுதியில் பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டியூர் ராஜகாளியம்மன் கோவில் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாக செல்லும் பெருமாள் மலை அடிவார சாலை, நகரமலை மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்பட்டு பலர் காயம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை நகரமலை அடிவாரத்திற்கு செல்லும் சாலையில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். பா.ஜனதா கட்சியின் அழகாபுரம் மண்டல தலைவர் சிவக்குமார் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்களும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பழுதடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story