பட்ஜெட் தாக்கல் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு பரமேஸ்வர் பேட்டி


பட்ஜெட் தாக்கல் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2018 12:03 AM GMT (Updated: 18 Jun 2018 12:03 AM GMT)

பட்ஜெட் தாக்கல் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பரமேஸ்வர் கூறினார். துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

பொதுவாக புதிய அரசு அமையும்போது, அந்த அரசின் நோக்கம் என்ன என்பது பட்ஜெட் மூலமாக வெளிப்படுத்துவது வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு அரசுக்கும், அந்த அரசுக்கே உரித்தான திட்டங்கள் உள்ளன. பட்ஜெட் தாக்கல் குறித்து கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் திட்டங்கள் குறித்து ஒரு பொது செயல் திட்டத்தை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 10 நாட்களுக்குள் பொது செயல் திட்டத்தை வகுத்து தாக்கல் செய்யும். அந்த குழு அறிக்கை வழங்கும் வரை பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது சாத்தியம் இல்லை.

காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை அமல்படுத்தினால் போதுமானது என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறி இருக்கிறார். எதன் அடிப்படையில் அவர் இவ்வாறு கருத்தை தெரிவித்தார் என்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சி பற்றி முதல்-மந்திரி, நான் மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகியோர் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் ஆட்சியை பற்றி பேசுவதால் கூட்டணியில் தேவை இல்லாத குழப்பங்கள் எழுகின்றன.

இதற்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம். இந்த கூட்டணி அரசு ஒரு ஆண்டில் கவிழ்ந்துவிடும் என்று சிலர் தகவல்களை பரப்புகிறார்கள். இது சரியல்ல. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் 5 ஆண்டுகள் நீடிப்பார். ஒரு ஆண்டு வரை தனது ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று குமாரசாமி கூறி இருக்கிறார். அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று எங்களுக்கு தெரியாது. குமாரசாமியின் இந்த கருத்து அடிப்படையில் பல்வேறு கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது சரியல்ல.

வாரிய தலைவர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். வாரியங்களை இரு கூட்டணி கட்சிகளும் ஆலோசித்து பங்கிட்டு கொள்வோம். விவசாய கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அதே போல் மந்திரிசபை விரிவாக்கம் பற்றியும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

முன்னதாக பரமேஸ்வரை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கர்நாடகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் மற்றும் கூட்டணி அரசில் கருத்தொற்றுமை குறித்து ஆலோசனை நடத்தினர். 

Next Story