கன்னியாகுமரி துறைமுக பணிக்கு வந்ததாக கருதி சாலை சர்வே பணியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை சிறைபிடித்த பொதுமக்கள் போலீசார் மீட்டு தீவிர விசாரணை

கன்னியாகுமரி துறைமுக பணிக்கு வந்ததாக கருதி சாலை சர்வே பணியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார் அவர்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்ல 4 வழிச்சாலை அமைப்பட்டுள்ளது.
இந்த சாலையில் கன்னியாகுமரி முருகன்குன்றம் முதல் சீரோ பாயிண்ட் வரை உள்ள பகுதியில் சாலை சர்வே பணியில் நேற்று காலையில் 2 வாலிபர்கள் ஈடுபட்டனர். அவர்கள் மாலை 3 மணியளவில் சீரோ பாயிண்ட் பகுதியில் பணி செய்தனர்.
அப்போது, கன்னியாகுமரி கோவளம் முதல் கீழ மணக்குடி வரை அமைய உள்ள சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைப்பதற்காக சர்வே பணியில் 2 பேரும் ஈடுபடுவதாக கோவளம் பகுதியில் தகவல் பரவியது.
இதைகேட்ட அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். உடனே அவர்கள் ஒன்று திரண்டு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 2 வாலிபர்களையும் சிறைபிடித்து கோவளம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அந்த வாலிபர்கள் வைத்திருந்த அதிநவீன கருவிகளையும் பிடுங்கி வைத்துக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 வாலிபர்கள் மற்றும் அவர்களின் அதிநவீன கருவிகளையும் மீட்டு போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர், போலீசார் வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சென்னை கெருகம்பாக்கம் பூமாதேவிநகர் பகுதியை சேர்ந்த அருண்குமார்(வயது 21), அருள்ராஜ்(29) என்பது தெரிவந்தது. மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் சர்வே நிறுவனம் மூலம் கடந்த 3 நாட்களுக்கு முன் பணிக்காக கன்னியாகுமரி வந்ததாவும், கன்னியாகுமரியில் ஒரு உயர் அதிகாரி ஆலோசனையின்படி சர்வே பணியில் ஈடுபட்டதும் தெரிவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கன்னியாகுமரி உதவி போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story