காஞ்சீபுரம் மாவட்டத்தில் மண் வளம் பாதிப்பதை தவிர்க்க அம்மா உயிர் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
மண் வளம் பாதிக்கப்படுவதை தவிர்க்க அம்மா உயிர் உரங்களை பயன்படுத்தலாம் என காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் பா.பொன்னையா அறிவுரை வழங்கி உள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதனை தவிர்த்திட விவசாயிகள் தொடர்ந்து, உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி, மண்ணின் நலத்தை மீண்டும் வளமையாக்கினால் மட்டுமே நஞ்சற்ற உணவு உற்பத்தியை பெருக்க இயலும்.
நாட்டிலேயே அதிகபட்சமாக 22 உயிர் உர உற்பத்தி மையங்களை கொண்டு அதிக அளவில் உயிர் உரங்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
அசோஸ்பைரில்லம்(நெல்), அசோஸ்பைரில்லம்(இதர பயிர்கள்), ரைசோபியம்(பயறு), ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்ற 5 வகையான திட உயிர் உரங்கள் ஆண்டுக்கு 3 ஆயிரம் மெட்ரிக் டன்(200 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 லட்சம் பொட்டலங்கள்) மற்றும் திரவ உயிர் உரங்கள் ஆண்டுக்கு 6 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு திட உயிர் உரம் பொட்டலம் ஒன்றுக்கு ரூ.6 வீதமும், திரவ உயிர் உரம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.280 வீதமும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன.
அம்மா உயிர் உரம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் குறிப்பிடத்தக்க சாதனையை நினைவு கூறும் வகையில் உயிர் உரங்களை, “அம்மா உயிர் உரங்கள்” என்று பெயரிட்டு, நவீன உறைகளிட்டு விவசாயிகளிடம் அவைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உயிர் உரங்கள் பயன்பாட்டை அதிகரித்து, அதன் உற்பத்தியை பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அம்மா உயிர் உரங்கள் பயன்பாட்டின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, ரசாயன உரங்களின் மீதான 20 முதல் 25 சதவீதம் வரையிலான செலவினை சேமிக்கலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த அங்கக பொருட்களான உயிர் உரத்தினை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் பாதிக்கப்படுவதை தடுத்து மகசூலை அதிகரிக்கலாம்.
உற்பத்தி உயர்வு
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் பயன்படுத்துவதன் மூலம் தழைச்சத்தினையும், பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்துவதன் மூலம் மணிச்சத்தினையும் மண்ணில் சேர்க்கலாம்.
தமிழக அரசு திரவ உயிர் உரங்கள் உற்பத்தியில் அதிநவீன தொழில் நுட்பமான இணை ஓட்ட திரவ வடிப்பான் முறையை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தி, முன்னோடியாக திகழ்கின்றது.
இதன் மூலம் திரவ உயிர் உரங்களின் உற்பத்தியானது 2.5 லட்சம் லிட்டரில் இருந்து 6 லட்சம் லிட்டராக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story