நடிகர் எஸ்.வி.சேகர் 12-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் நெல்லை கோர்ட்டு உத்தரவு


நடிகர் எஸ்.வி.சேகர் 12-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் நெல்லை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jun 2018 3:44 AM IST (Updated: 19 Jun 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் வருகிற 12-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை,

பெண் பத்திரிகையாளர் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டு இருந்ததாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, நெல்லை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “பத்திரிகையாளர்கள் பற்றி முகநூலில் ஆபாசமான சொற்களால் அவதூறான தகவல்களை பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் எஸ்.வி.சேகர் சார்பில் வக்கீல் அரி ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், “சென்னையில் வழக்குகள் இருப்பதால் இந்த வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்க வேண்டும்“ என்றார். அதற்கு நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பிரபாகர், வினோத்குமார் ஆகியோர், “நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஏற்கனவே காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்“ என்று கூறினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் தேதிக்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது எஸ்.வி.சேகர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு வாரண்டு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.

Next Story