ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்


ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 18 Jun 2018 10:34 PM GMT (Updated: 18 Jun 2018 10:34 PM GMT)

எங்கள் மண்ணில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி மடத்தூர், முருகேசன்நகர், அ.குமரெட்டியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது.

எங்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் அழிவுக்கு உள்ளாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய ஒரே காரணத்துக்காக இரவு, பகல் பாராது காவல்துறையினர் அத்துமீறி எங்கள் பகுதியில் உள்ள ஆண்களை கைது செய்து வருகிறார்கள். இதனால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பதற்றமான சூழ்நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம். ஆண்கள் வேலைக்கு செல்லவில்லை என்பதால் உணவுக்கு கஷ்டப்பட்டு வருகிறோம்.

எனவே மாவட்ட நிர்வாகம் போலீசாரின் தொடர் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். எங்கள் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் மண்ணை விட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை சாலை சந்திக்கும் இடத்தில் பல நாட்களாக உயர்கோபுர மின்விளக்குகள் எரியவில்லை. அந்த விளக்குகளை எரியச்செய்ய வேண்டும். அதேபோல் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரியில் இருந்து தெற்காக முள்ளக்காடு வரை தெரு மின்விளக்குகள் பல ஆண்டுகளாக எரியாமல் உள்ளன. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் இருந்து எட்டயபுரம் செல்லும் சாலையில், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு பாதுகாப்பாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தடுப்பு சுவரின் இருபக்கங்களிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மணல் அதிகளவில் குவிந்து காணப்படுகிறது. காற்று பலமாக வீசும்போது மணல் அடித்து செல்லப்பட்டு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தடுப்பு சுவருக்கு அருகில் கிடக்கும் மணலை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி மாவட்டம் தென்னம்பட்டியில் விவசாய பயன்பாட்டுக்கான மின்மாற்றி பழுதடைந்து சுமார் 45 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் மின்சாரம் இல்லாததால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருவி விட்டன.

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பழுதடைந்த அந்த மின்மாற்றியை சரிசெய்ய அல்லது மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story